Friday, July 17, 2009

ஆஸ்கர் தமிழன் !

நானும் ஓர் ஆஸ்கர் தமிழன் தான்
என் அவை நிகழ்ச்சிகளுக்கு
நீ தந்த நான்கு வார்த்தை பாராட்டினால்
"நீங்க ரொம்ப நல்லா பண்ணீங்க "

Tuesday, July 14, 2009

நீ வைரமா ? முத்தா ?

என் கவித்தலைவனுக்கு....
என் முதல் கவிதை.
கல் என்றாலும்...
தன் பிராத்தனை கேட்கப்படும்
என்று நம்பும் பக்தனைப் போல்
எப்படியும் ஒரு நாள் இந்த மடல்
உன்னை சேரும் என்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன்

ஜூலை 13.... இந்த நாள்
தமிழ் வரலாற்றில் ஒரு சகாப்தம்
தமிழின் பக்கங்களில்.....
நீங்காத நினவு சின்னம் !!!
தமிழ் அன்னை பெற்றெடுத்தாள் ஓர் தேவ தூதன் !
பிறக்கும் பொழுதே.......
அழுகைக்கு பதில்,
கவிதை தமிழில் சத்தம் இட்டு பிறந்தவன்.
தன்னை விட தமிழை நேசிப்பவன்!
தமிழுக்கு அரசன் !
என்றும் கவிபேரரசன்...
என் வைரமுத்து !

மூட்டைகளில் அரிசி தந்த பகலவனுக்கு....
காணிக்கையாய், ஒரு படி அரிசி தரும்
ஓர் ஏழை உழவனைப் போல்.
என் தமிழ் சூரியனுக்கு
ஏழை கவிஞனின் ஒரு படி அரிசி !!

எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது ?
சமுத்திரத்தை எப்படி
ஒரு குவளைக்குள் அடைப்பது ?
விண்ணை ஒரு புள்ளியில்
அடைப்பது எப்படி சாத்தியம் ?
உனக்கு பிடித்த பாஷையில் சொல்ல வேண்டும் என்றால்....
"தண்ணீர் தேசத்தை"...
எப்படி ஒரு வார்த்தையில் சொல்வது !!!

நீ பேனா எடுத்தால்....
சஹாராவிலும் சுனாமி வரும்!
கல்லறைகளிலும் ஆனந்த பைரவி !
விலைமகளும் கண்ணகியாய்!
விலங்குகளுக்கும் ஆறறிவு !
தெரு பெருக்கியும் ஓர் பில் கேட்ஸ் !
மரங்களுக்கும் மாலைகள் விழும் !
மண்ணும் பொன்னாய் !
கூவமும் நையகரவாய் !
தமிழின் உயரம் தொட்டவன் நீ...........

உண்மையை சொல்..
ஒரு நாள் தமிழ் தாய்க்கு
மகுடம் சூட்டுவாய் என்றறிந்து தானே
"வைரமுத்து" என்று பெயரிட்டாள் உன் அன்னை

உன்னை தமிழின் உச்சம் என்பதா ?
கற்பனைகளின் உச்சம் என்பதா?
கலையின் உச்சம் என்பதா?
இல்லை கவிகளின் உச்சம் என்பதா?
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்
இன்றைய கவிஞர்கள் அனைவரும் உன் மிச்சம்!
உன் மூச்சு காற்று பட்டே
இங்கு கவிஞர்கள் ஆனவர்கள் பலர்.....
என்னையும் சேர்த்து
உனக்கு எப்படி பாரதி, கண்ணதாசனோ
அப்படி தான் எனக்கு நீ!!

என் கவிதைகளுக்கு
விதையிட்டது என்னவள் என்றாலும்
நீர் ஊற்றியது நீ !
என்னை கவி எழுத
பேனா எடுக்க வைத்தது காதல் என்றாலும்.
அதற்கு மை ஊற்றியவன் நீ !!
நீ தமிழை நேசிப்பவன் மட்டும் அல்ல
தமிழை சுவாசிப்பவன் என்பது தான் உண்மை !

ஓவ்வொரு முறை
உன் கரு மேனியையும்
வெண்ணிற ஆடைகளையும்
பார்க்கும் போது....
தமிழுக்கும் நிறம் உண்டு
"கருப்பு வெள்ளை "
என்கிற எண்ணம் என் மனதில் ஆழ பதியும்.

உழக நாயகனின் கை அசைவை கூட
நடிப்பு என்று வாதாட ரசிகர்கள் உள்ளது போல்.
இசை புயலின் இருமலை கூட
மெல்லிசை என்று கேட்கும் விசிறிகளை போல்.
உன் மௌனத்தையும்
கவிதையாய் பார்க்கும்
ஓர் பைத்தியம் நான் !

உன்னை பற்றி எழுதும் போது தான்
வார்த்தை பஞ்சம்
எனக்கு ஏற்பட்டதில்லை !

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
பெருமிதம் கொண்டாள் தமிழ் அன்னை
உன்னை பெற்றதால் !!
நீ வாழ்க... உன் வழி தமிழும் வாழ்க
பல்லாண்டு !!!!!!!


Wednesday, July 8, 2009

எதிர்மறை !!!!


அழகான ராட்ஷசி நீ ! *
தெளிவான குழப்பம் நீ!
அன்புத் தொல்லை நீ!
செல்லமான அவஸ்த்தை நீ!
மௌன புயல் நீ!
அமுத நஞ்சு நீ! *
ஆனந்த கண்ணீர் நீ!
பாசச் சிறை நீ!
இப்படி சொன்னாலும் சரி...
அப்படி சொன்னாலும் சரி...
எப்படி சொன்னாலும் அழகானவள் நீ !!!!

Tuesday, July 7, 2009

என் முதல் குழந்தை.........

கவிதைகளுக்கு பிறந்தநாள்

“ இன்று என் கவிதைகளுக்கு பிறந்தநாள் “
இன்று வரை...
சிறை அடைந்த என் அத்தனை வார்த்தைகளும்
இன்று முதல் சிறகெடுக்கின்றன

என் முதல் காதல் தமிழ் மீது,
அவளுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைகள் தான்
என் கவிதைகள் !!!
என் குழந்தைகள்.... தாயைப் போல்
அழகானவள், தெளிவானவள்

"நீ குழந்தையாட ???????" என்று
விளங்காமல் கேட்கும் சிலருக்கு
விளக்கமாய் சொல்கிறேன்
இந்த தளத்திற்கு ஓர் குழந்தையாய்
கவிதை தமிழுக்கு ஓர் குழந்தையாய்
இவற்றில் எல்லாம் நடை பழகும் ஓர் குழந்தை !

வைரமுத்து தந்த....
"பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக
தேடி பார்த்தேன் " என்கிற வரிகள்
எனக்கு உகந்தவை !
என்னவளின் சுவாச காற்றை
தேடினேன், தேடுகிறேன், தேடுவேன் !
அவள் கிடைக்கும் வரை.
அந்த தேடலின்
கண்டு பிடிப்புகள் தான்
என் காதலும், என் கவிதைகளும்

ஊடல் தான் காதலின் ஆரம்பம் என்பார்கள்.
என்னை கேட்டால்....
என் தேடல் தான் காதலின் ஆரம்பம் என்பேன்!!
என்னை நனைத்த காதல் மழையின்
சில சாரல்களை மட்டும்
இங்கு தூவி விட்டு இருக்கிறேன்
இங்கு காதல் மட்டும்...
காதலில் மட்டும்.

வாசகர்களுக்கு ஓர் விண்ணப்பம்....
குழந்தைகள் கையில் கிடைத்த
பேப்பர், பேனாவைப் போல் தான்.
என் கையில் தமிழும், கவிதையும்
கிறுக்கல்கள் மட்டும் தான்....
குழந்தையின் கிறுக்கலை ஓவியமாய் பார்க்க தெரிந்தவர்கள்
தட்டி கொடுங்கள் !
குறை கண்டவர்கள்... சுட்டி காட்டுங்கள் !
இரண்டுக்குமே காத்திருக்கும் என் மனம்...........................................